அம்பேத்கர் லண்டனில் படிக்கும்பொழுது தங்கியிருந்த இல்லத்தை பார்வையிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெரியாரும் அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது என தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-
பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் லண்டன் பொருளியல் பள்ளியில் (LSE) படிக்கும்பொழுது, தங்கியிருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இல்லத்தைப் பார்வையிடும் வாய்ப்பினைப் பெற்றேன்.
அந்த இல்லத்தின் அறைகளினூடே நடந்து செல்கையில் பெரும் வியப்பு என்னுள் மேலோங்கியது. இந்தியாவில் சாதியின் பேரால் ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞன், இங்குதான் தனது அறிவால் வளர்ந்து, இலண்டனில் அனைவரது மரியாதையையும் பெற்று, பின்னர் இந்தியாவின் அரசியலமைப்பையே வடித்துத் தரும் நிலைக்கு உயர்ந்தார்.
குறிப்பாக, தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது.
இப்படியொரு உணர்வெழுச்சி மிகுந்த தருணம் வாய்க்கப் பெற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்! ஜெய் பீம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






