21 முதல் நிலை காவலர்களுக்கு பதவிநிலை உயர்வு ஆணை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்...!

சென்னை தலைமைச் செயலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (30.06.2025) திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் 21 முதல் நிலை காவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவிநிலை உயர்வு ஆணை வழங்குகிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
(1) காவல் துறையில் உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி தற்போதுள்ள 10+5+10 ஆண்டுகள் என்ற காவலர்களுக்கான நிலை உயர்த்துதலை மாற்றி 10+3+10 என்று நிர்ணயம் செய்து, மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 9 முதல் நிலை காவலர்கள் மற்றும் காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களிலிருந்து 12 முதல் நிலை காவலர்கள், என மொத்தம் 21 முதல் நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணைகளை வழங்குகிறார்.
(2) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 59 சித்தா உதவி மருத்துவ அலுவலர்கள், 2 ஆயுர்வேதா உதவி மருத்துவ அலுவலர்கள், 1 யுனானி உதவி மருத்துவ அலுவலர், 53 யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி மருத்துவ அலுவலர்கள் / விரிவுரையாளர்கள் (நிலை-II) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 57 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 172 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






