ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் இயற்ற ஆணையம்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு சமூகத்தில் நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட உதவும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது.
சென்னை,
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் போன்ற கொடூரச் செயல்களைத் தடுப்பதற்கு உறுதியான சட்டரீதியான நடவடிக்கைகள் அவசியம் என்று எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில், ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும், அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் தனிச் சட்டம் இயற்றப்படும் என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது.
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் சமூகத்தின் அடித்தளத்தை அசைக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. இவற்றைத் தடுக்க தமிழக அரசு அதன் தீவிரத்தை உணர்ந்து, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி பல்வேறு தளங்களில் வலியுறுத்தி வருகிறது. ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்டிபிஐ மட்டுமின்றி, பல்வேறு சமூக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
இந்தப் பின்னணியில் முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆணவக் கொலைகள் பெரும்பாலும் சாதி, மதம் அல்லது குடும்பக் கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயங்களால் நிகழ்கின்றன. இதனைத் தடுக்க இதுவரை இருக்கும் சட்டங்கள் போதுமானதாக இல்லாத நிலையில், தனிச் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ள நிலையில், முதல்-அமைச்சரின் அறிவிப்பு சமூகத்தில் நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட உதவும் என்பதில் ஐயமில்லை.
தமிழக அரசு இந்த அறிவிப்பை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவாகப் பெற்று, ஆணவக் கொலைகளுக்கு எதிரான வலுவான தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






