திடீரென தீப்பிடித்து எரிந்த கன்டெய்னர் லாரி - கிருஷ்ணகிரியில் பரபரப்பு


திடீரென தீப்பிடித்து எரிந்த கன்டெய்னர் லாரி - கிருஷ்ணகிரியில் பரபரப்பு
x

அதிர்ஷ்டவசமாக வண்டியில் தூங்கி கொண்டு இருந்த டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த டிரைவர் சிவன் குமார் (வயது 32) லாரியை ஓட்டிச்சென்றார். சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பஸ் நிறுத்தம் பகுதிக்கு லாரி வந்த போது, டிரைவருக்கு தூக்கம் வரவே அவர் வண்டியை நிறுத்தி விட்டு வண்டிக்குள் தூங்கினார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென நின்று கொண்டிருந்த அந்த லாரியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதைக்கண்டு உள்ளே தூங்கி கொண்டிருந்த டிரைவர் சிவன் குமார் அதிர்ச்சியடைந்து, பதறியடித்தவாறு கீழே குதித்து உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் ஓசூரில் இருந்து விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து நீண்ட நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் மினிலாரியின் முன்பகுதி மற்றும் டயர்கள் எரிந்து தீக்கிரையானது. இதன் சேத மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்த சூளகிரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் காரணமாக ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story