அனைத்துக்கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் - பிரேமலதா அறிவிப்பு

2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தஞ்சாவூர்,
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"தேமுதிகவை பொறுத்தவரையில் தாய் மொழியை காத்து அதேபோல் அனைத்து மொழியையும் காக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. பல்வேறு வகைகளில் வருங்காலம் சிறக்கும். எனவே அவர் அவர்களுக்கு பிடித்த மொழிகளை படிப்பதில் எந்த தவறும் இல்லை. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான எங்களுக்கும் ஒரு வார காலத்திற்கு முன்பே அழைப்பு வந்துவிட்டது. அதனால் உறுதியாக தேமுதிக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்.
தமிழக முழுவதும் பல்வேறு விதமான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் டாஸ்மாக், கள்ளச்சாராயம், போதை வஸ்துகள் அதிகரிப்பு, வேலை இல்லாத நிலைமை, பாலியல் வன்கொடுமை என எல்லா பக்கமும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. நிச்சயம் இது தடுக்கப்பட வேண்டும். 2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






