வெள்ள பாதிப்பை தடுக்கும் திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்


வெள்ள பாதிப்பை தடுக்கும் திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 5 Aug 2025 9:32 PM IST (Updated: 5 Aug 2025 10:31 PM IST)
t-max-icont-min-icon

91 கோடி மதிப்பில் புதிய நேரடி கால்வாய் அமைக்கும் பணிக்கு உத்தண்டியில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பருவமழைக் காலத்தில் வெள்ள பாதிப்பை தடுத்திடும் வகையிலான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தென் சென்னை பகுதியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து ஒக்கியம் மடுவு வழியாக பக்கிங்காம் கால்வாய் மூலம் மழை நீர் கடலில் கலக்கின்ற வகையில், நீர்வளத்துறை மூலம் ரூ.91 கோடி மதிப்பில் புதிய நேரடி கால்வாய் அமைக்கும் பணிக்கு உத்தண்டியில் இன்று அடிக்கல் நாட்டினோம்.

இந்தப்பணி நிறைவடையும் தருவாயில், வேளச்சேரி, ராம் நகர், மடிப்பாக்கம், பெரும்பாக்கம், நாராயணபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு தவிர்க்கப்படும்.

அதே போல, பருவமழைக்காலங்களில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வெள்ளம் ஏற்படுவதை தடுத்திடும் வகையில் ரூ.130 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை தீர்வுப்பணிகளுக்காகவும் அடிக்கல் நாட்டினோம்.

இத்திட்டத்தின் மூலம், அம்பத்தூர் ஏரியில் இருந்து கூவம் நதிக்கு மழைநீரை திருப்பிவிடுகிற வகையில் கால்வாய் அமைக்கப்படவிருக்கிறது.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிற போது அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்குகிற நிலை ஏற்படாது.

தென் சென்னை பகுதி மற்றும் அம்பத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்தப்பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளை அறிவுறுத்தினோம்.என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story