என்ஜினில் கோளாறு: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம்

கோப்புப்படம்
நாகர்கோவில்-சென்னை செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
நாகர்கோவில்,
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மதியம் 12.35 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். பின்னர் மறுமார்க்கமாக நாகர்கோவில் சந்திப்பில் இருந்து சென்னைக்கு பிற்பகல் 3.50 மணிக்கு புறப்படும். நேற்று வழக்கம் போல பயணிகளை ஏற்றி கொண்டு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது.
ரெயில் பழையாறு பாலம் அருகே சென்றபோது திடீரென ரெயில் என்ஜினில் திடீரென வித்தியாசமாக சத்தம் கேட்டது. சுதாரித்து கொண்ட டிரைவர், உடனே ரெயிலை நடுவழியிலேயே நிறுத்தினார். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய டிரைவர் என்ஜினில் ஆய்வு செய்தார். பின்னர் இதுபற்றி ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தொவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள் ரெயில் என்ஜினில் பழுது இருப்பதை அறிந்தனர். பின்னர் அந்த பழுதை சரி செய்தனர். இதனை தொடர்ந்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ரெயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் 25 நிமிடங்கள் ரெயில் தாமதமாக சென்றது. நடுவழியில் திடீரென ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் என்னவென்று தெரியாமல் பீதிக்குள்ளானார்கள். பிறகு என்ஜின் கோளாறு பற்றி அறிந்ததும் இயல்பான நிலைக்கு வந்தனர். என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் அந்தியோதயா ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






