சென்னை மாநகராட்சி சார்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

அனைத்து மண்டலங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் விழாவானது நம் பண்பாட்டின் அடையாளம். பொங்கல் விழா இயற்கைக்கு நன்றி சொல்லும் வகையிலும், உழைப்பைக் கொண்டாடும் வகையிலும் அமையும் விழாவாகும். பொங்கல் திருநாளை பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொண்டாடும் விதமாக, மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா இன்று (14.01.2026) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், வட்டார துணை ஆணையாளர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், முக்கியப் பிரமுகர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், அலுவலக வாயிலில் அழகிய வண்ண கோலமிட்டு, மலர் தோரணங்கள் மற்றும் அலங்காரத்துடன் புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம் இட்டு பொங்கல் செய்து, தித்திக்கும் செங்கரும்புடன் சிறப்பாக கொண்டாடினர்.
பாரம்பரிய முறையில் பெண்களின் கும்மியாட்டமும், தப்பாட்டமும் நடைபெற்றது. மேலும், உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலம் போடுதல், இசை நாற்காலி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், முன்களப் பணியாளர்களுக்கு பரிசுத் தொகுப்புகளும் வழங்கி கொண்டாடப்பட்டது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.






