கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிசம்பர் 31 வரை பயணிக்கலாம் - போக்குவரத்துக் கழகம்


கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிசம்பர் 31 வரை பயணிக்கலாம் - போக்குவரத்துக் கழகம்
x

கோப்புப்படம் 

கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி டிசம்பர் 31 வரை அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி டிசம்பர் 31 வரை பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சட்டமன்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பயனாளிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, பெற்றிட வழிவகை செய்யப்படும் என அறிவித்ததன் அடிப்படையில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு பயணியர் மற்றும் பொருள் போக்குவரத்துக் கழகம் (TNMLC) தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டைகளை பெறும் வசதி, முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 07.09.2023 அன்று முதல் அமல்படுத்தப்பட்டது.

பயனாளிகள், இத்திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமுமின்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2025-26ம் நிதி ஆண்டில் இணையதளம் வாயிலாக பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க ஏதுவாகவும், இவ்வசதியினை அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் (விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி) விரிவுபடுத்தி, புதிதாக பயண அட்டையை பயனாளிகளுக்கு வழங்கவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதனை செயல்படுத்த மாவட்ட அளவில் முகாம்கள் நடத்த வேண்டி உள்ளதால், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் அக்டோபர் 31 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை, டிசம்பர் 31 வரை மேலும் இரண்டு மாத காலத்திற்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story