நிதிச் சிக்கலில் தவிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித்திறனும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் – உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விளம்பரம் செய்வதில் திமுக அரசு செலுத்தும் கவனத்தை பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டிருக்கும் நிதிச் சிக்கலை குறைப்பதில் செலுத்த வேண்டும்.
மே மாதத்திற்கான ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனக்கூறி சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அப்பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள்ளாகவே கடந்த நான்கு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து இன்று ஊதியம் வழங்க அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என மாநிலத்தின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள நிதிச்சிக்கலால் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய பல்கலைக்கழகங்களின் தாயாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு பல ஆண்டுகளாக துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதும், மாநில அரசு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக ஒதுக்காமல் காலம் தாழ்த்துவதாலும் அங்கு உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித்திறனும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
நீண்ட போராட்டத்திற்கு பின்பு மே மாதத்திற்கான ஊதியம் வழங்குவதாக அரசு உறுதியளித்திருக்கும் நிலையில், ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை தொடர் போராட்டம் நடத்திதான் பெற வேண்டுமா ? என சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்களும் அலுவலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட நிதிச் சிக்கலில் தவிக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேவைப்படக்கூடிய நிதியை உடனடியாக விடுவித்து அப்பல்கலைக்கழகங்கள் எவ்வித சிக்கலுமின்றி தொடர்ந்து இயங்கிடத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.






