ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை - கமல்ஹாசன் வரவேற்பு


Gnanasekaran sentenced to 30 years life - Kamal Haasan welcomes it
x

ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

'அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு, தண்டனைக் குறைப்பின்றி 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்திருக்கும் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை மனமுவந்து வரவேற்கிறேன்.

பெண்களுக்கு எதிரான எந்த ஒரு செயலையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளவோ சமரசம் செய்துகொள்ளவோ முடியாது. அத்தகைய குற்றங்களுக்கு அஞ்சும் வகையிலான தண்டனை தரப்படும் என்னும் நம்பிக்கையை இத்தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த 28-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் அவருக்கு என்ன தண்டனை வழங்குவது? என்பது குறித்து வருகிற ஜூன் 2-ந் தேதி (அதாவது இன்று) அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராஜலட்சுமி இன்று உத்தரவிட்டார். மேலும் ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தும், 30 ஆண்டுகள் எந்த தண்டனையும் குறைப்பும் இன்றி ஆயுள் தண்டனையை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஞானசேகரன் ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.

1 More update

Next Story