ஜனவரி 6-ந் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி; அமைச்சர் அன்பில் மகேஷ்


ஜனவரி 6-ந் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி; அமைச்சர் அன்பில் மகேஷ்
x

ஜனவரி 6-ந் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்-அமைச்சர் தெரிவிப்பார் என்று அமைச்சர் அனிபில் மகேஷ் கூறினார்.

திருச்சி,

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக தான். மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு விடக்கூடாது. இதனை தனியார் பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளார்கள். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இதுகுறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளார்கள். ஜனவரி 6-ந் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்-அமைச்சர் தெரிவிப்பார். மத்திய அரசு நமக்கான நிதி கொடுப்பதில்லை என்பதை அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளோம். இருந்தபோதிலும் அவர்களுக்கான நல்ல செய்தி நிச்சயம் வரும்.

தேசிய ஜனநாயக கூட்டணி பலப்படுத்தப்பட்டால் தி.மு.க.விற்கு சவாலாக இருக்குமா? என கேட்கிறீர்கள். எங்களுக்கு போட்டியே திராவிட மாடல் 2.0-ல் நாங்கள் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் தான். தற்போது மேற்கொள்ளும் திட்டங்களை காட்டிலும் அதில் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் போட்டியே. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story