அரசுப்பள்ளிகளை தேடி வரக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும் - ஜி.கே.வாசன்

கோப்புப்படம்
அனைத்து தரப்பு குடும்பத்தினரின் பிள்ளைகளும் அரசுப்பள்ளிகளை தேடி வரக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழக அரசு – அரசுப் பள்ளிக்கட்டிடங்களின் தரத்தை மேம்படுத்த செலவு செய்ய வேண்டுமே தவிர பள்ளிக்கட்டிடங்கள் தரமற்றதாக இருக்க செலவு செய்யக்கூடாது. ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 20.07.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இடிந்து விழுந்தது.
விடுமுறை நாள் என்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் விடுப்பில் இருந்த காரணத்தால் அவர்கள் இந்த இடிபாடுகளில் சிக்கவில்லை. இந்த பள்ளிக்கட்டிடம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக முதல்-அமைச்சரால் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்-அமைச்சரால் திறக்கப்பட்டு ஓராண்டே ஆன பள்ளிக்கட்டிடமே உறுதியற்ற நிலையில் இருப்பது அரசின் செயலற்ற ஆட்சியை வெளிப்படுத்துகிறது. அரசின் பள்ளிக்கட்டிடங்களை யார் கட்டினாலும், முதல்-அமைச்சர் மட்டுமல்ல யார் திறந்தாலும் திறக்காவிட்டாலும் கட்டிடங்களின் தரமானது ஒதுக்கிய மதிப்பீட்டிற்கு ஏற்ப சற்றும் குறையாமல் இருக்க வேண்டும்.
அதை விடுத்து ஒதுக்கிய மதிப்பீட்டில் லஞ்சம், ஊழல் என கணக்கிட்டு கட்டிட வேலைப்பார்த்தால் தரம் இருக்காது. இப்படித்தான் தமிழ்நாட்டில் அரசாங்கத்தால் எந்த ஒரு திட்டத்திற்கும் ஒதுக்கப்படும் நிதி, மதிப்பீட்டுத் தொகையானது முழுமையாக செலவிடப்படாமல் விரயமாகி, மக்களுக்கு உரிய பலன்கள் முழுமையாக கிடைக்கவில்லை.
அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அதிக எண்ணிக்கையில் சேர்க்க ஏதேனும் ஆக்கப்பூர்வமாக திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த நாம் கோரிக்கை வைத்தால் அதை விடுத்து இருக்கும் பள்ளிக்கட்டிடங்களின் தரத்தை குறைக்கும் வகையில் செயல்படுவது தான் இன்றைய தமிழக தி.மு.க அரசின் அவலநிலை.
தமிழக அரசே – கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கெல்லாம் அரசின் பள்ளிகளில் கட்டிடங்களின் தரத்தை மேம்படுத்த அல்லது புதிய கட்டிடங்கள் கட்ட செலவிடப்பட்டதோ அதெல்லாம் முறையாக செலவிடப்பட்டதா என ஆய்வு செய்து, அனைத்து அரசுப்பள்ளிக் கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
அரசுப்பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பள்ளி சம்பந்தப்பட்ட எந்த ஒரு பணியிலும் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும், தரமும் இருப்பதற்கு எவ்வித சமரசமும் குறுக்கீடாக இருக்கக்கூடாது. அரசு தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிக முக்கியத்துவத்தை அரசுப்பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டும். காரணம் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினரின் பிள்ளைகள் தான் அரசுப்பள்ளிகளை நாடி வருகிறார்கள்.
எனவே தமிழக அரசு – தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளிக்கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை அவ்வப்போதே எடுத்து அனைத்து தரப்பு குடும்பத்தினரின் பிள்ளைகளும் அரசுப்பள்ளிகளை தேடி வரக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






