கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு - முத்தரசன்


கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு - முத்தரசன்
x

தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவ வேண்டிய கவர்னர், அதற்கு தக்கபடி ஒரு நாளும் நடந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு கவர்னர் ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவ வேண்டிய கவர்னர், அதற்கு தக்கபடி ஒரு நாளும் நடந்து கொள்ளவில்லை. கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி கவர்னரின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான விளக்கம் அளித்து, வழங்கிய தீர்ப்பையும் மதிக்கவில்லை.

அண்மையில் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களிலும் கலை, இலக்கியம் உள்ளிட்ட படைப்புத் துறையிலும் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்துள்ள கலைஞர் மு.கருணாநிதி பெயரில் பல்கலைக் கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

இந்த மசோதாவை கடைசி நாள் வரை, கிடப்பில் போட்டு வைத்து, இறுதியாக குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார். பிறவி மச்சத்தை மாற்ற முடியாது என்பது போல், கவர்னர் அத்துமீறல் தொடரும் நிலையில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காது, புறக்கணிக்கிறது. அவரது எதிர்மறை அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story