கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் - ராமதாஸ்


கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் - ராமதாஸ்
x

கோப்புப்படம் 

கந்துவட்டிக் கொடுமைக்கு அரசு துணை போகக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையின் உச்சமாக மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதும், அவரது மகன் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த கந்துவட்டிக் கொலை மற்றும் கொடுமைக்கு முழுக்க முழுக்க தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியம் தான் காரணமாகும். இவற்றைத் தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

நெல்லை மாநகர எல்லைக்குட்பட்ட சி.என்.கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற மூட்டைத் தூக்கும் தொழிலாளி, அவரது தாயார் சாவித்திரியின் மருத்துவச் செலவுகளுக்காக காளிராஜ் என்பவரிடம் சில மாதங்களுக்கு முன் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம், அதாவது 120% வட்டி செலுத்த வேண்டுமென காளிராஜ் கூறியிருக்கிறார். அதை ஏற்று கடன் வாங்கிய கண்ணன், தொடர்ந்து மாதம் ரூ.10,000 வட்டி செலுத்தி வந்த நிலையில், கடந்த மாதத்திற்கான வட்டியை செலுத்தவில்லை.

ஆண்டுக்கு 120% கந்துவட்டி செலுத்தாததற்காக கடந்த வாரம் கண்ணனின் வீட்டுக்கு சென்று அவரது தாயார் சாவித்திரியை காளிராஜ் மிரட்டியுள்ளார். அது தொடர்பாக காவல்துறையில் சாவித்ரி புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த காளிராஜும், அவரது உறவினரும் கடந்த சில நாட்களுக்கு முன் நயினார்குளம் சந்தையில் மூட்டைத் தூக்கிக் கொண்டிருந்த கண்ணனை கொடூரமாக தாக்கியதுடன், கத்தியாலும் குத்தியுள்ளனர். அதில் படுகாயமடைந்த கண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை சாவித்திரியின் வீட்டிற்கு சென்ற காளிராஜும் அவரது உறவினரும் இரும்புக் கம்பியால் அவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர். இந்தக் கொடூரக் கொலையைத் தடுக்கத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கந்துவட்டிக் கொடுமைகளை தாமாக முன்வந்து தடுக்க வேண்டியது தமிழக அரசு மற்றும் காவல்துறையின் கடமை. அதை அவர்கள் செய்யவில்லை. 120% கந்து வட்டி செலுத்தாதற்காக சாவித்திரியை காளிராஜும் அவரது உறவினரும் வீடு தேடி வந்து மிரட்டிய நிலையில், அது தொடர்பாக சாவித்திரி அளித்த புகாரின் அடிப்படையில் காளிராஜும், அவரைச் சார்ந்தவர்களும் கைது செய்யப்பட்டிருந்தால் சாவித்திரி அடித்துக் கொலை செய்யப்பட்டதை தடுத்திருக்கலாம். அதன்பின் 3 நாட்களுக்கு முன் நயினார்குளம் சந்தையில் கண்ணனை கத்தியால் குத்திய பிறகாவது காளிராஜ் மற்றும் அவரது உறவினரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் சாவித்திரி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த படுகொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் கந்து வட்டிக் கொடுமைகளை தமிழக அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்ப்பதற்கும், கந்துவட்டிக் காரர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும் கொடூரமான எடுத்துக்காட்டுதான் மூதாட்டி சாவித்திரியின் படுகொலை ஆகும். தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே கந்துவட்டிக் கொடுமைகளும், அதனால் நிகழும் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 1200-க்கும் மேற்பட்டோர் கந்துவட்டியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனாலும் கூட கந்துவட்டிக் கொடுமைகளைத் தடுக்க தமிழகத்தின் ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கந்துவட்டிக்காரர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காததற்கு சென்னை ஐகோரட்டின் மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்திருக்கிறது. மதுரையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் இளங்கோ என்பவர், தமது நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க கார்த்திக் செல்வம் என்பரிடமிருந்து ரூ. 2 லட்சம் கடன் வாங்கினார். அதற்காக அடுத்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.2.26 கோடியை வட்டியாக செலுத்தியுள்ளார். அதாவது ரூ. 2 லட்சம் அசலுக்கு மாதம் ரூ.7.50 லட்சத்தை வட்டியாக செலுத்தியுள்ளார். இது மாதத்துக்கு 300% வட்டியாகும். இவ்வளவுக்குப் பிறகும் விடாத கந்து வட்டிக்காரர், கடன் வாங்கியவரின் மென்பொருள் நிறுவனத்தை எழுதித் தரும்படி மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் கந்துவட்டி திமிங்கலத்தை காவல்துறை கைது செய்யவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரைக்கிளை கந்துவட்டிக்காரர்களுடன் காவல்துறையினர் கூட்டணி அமைத்து செயல்படுவதாக குற்றஞ்சாட்டியது. அதுமடுமின்றி, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றியிருக்கிறது. ஒரு கந்துவட்டி கும்பல் மாதம் 300% வட்டி வாங்கியது மட்டுமின்றி, ஒரு நிறுவனத்தையே மிரட்டிப் பிடுங்க முயன்றுள்ளது. ஆனாலும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் என்ன ஆட்சி நடக்கிறது?

தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கந்துவட்டிக் கொடுமை தொடர்கதையாகி வருகிறது. 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் நாள் இதே நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டிக் கொடுமை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். அதன்பிறகும் கந்துவட்டித் தற்கொலைகள் தொடர்ந்த போதிலும் கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கும் ஆட்சியாளர்களின் மனம், அப்பாவிகளுக்காக இரங்கவில்லை.

கந்துவட்டிக் கொடுமையால் நிகழும் தற்கொலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த 14.11.2003 அன்று தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை 3 ஆண்டுகள்தான் என்பதாலும், ஆளுங்கட்சியினரின் ஆதரவு இருப்பதாலும் கந்துவட்டியை ஒழிக்க முடியவில்லை. ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்படும் கந்துவட்டிக் காரர்களை கட்டுப்படுத்தாத வரை இத்தகைய தற்கொலைகளை தடுக்க முடியாது. எனவே, கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். நெல்லையில் மூதாட்டி சாவித்திரியை அடித்துக் கொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story