ஆவின் பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


ஆவின் பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

கோப்புப்படம் 

டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி குறைப்பிற்கு முன் இருந்த அதே விலையை மீண்டும் ஆவின் நிறுவனம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

சென்னை

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பொதுமக்களின் நுகர்வோர் சக்தியை அதிகரிக்கவும், பொருட்கள் மற்றும் சேவைகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கவும், பொதுமக்களின் தேவையை அதிகரித்து அதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரியை வெகுவாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டு இந்த வரிக் குறைப்பு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பின் பயன் மக்களை சென்றடைய வேண்டுமென்பதை மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதன் அடிப்படையில், காப்பீட்டு நிறுவனங்கள், பொருட்களை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பின் பயனை மக்களுக்கு அளிக்கத் துவங்கின. ஆனால், தமிழ்நாட்டில் தூதிர்ஷ்டவசமாக தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலையை குறைக்கவில்லை. தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பால் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகவும், ஐஸ்கிரீம் வகைகள் மீதான வரி 18 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகவும் செப்டம்பர் மாதம் 22-ம் தேதி முதல் குறைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பால் நிறுவனங்கள் வரிக் குறைப்பின் பயனை மக்களுக்கு அளித்துள்ள நிலையில், ஆவின் நிறுவனம் மட்டும் வரியைக் குறைத்து புதிய விலைப் பட்டியலை வெளியிடவில்லை. மாறாக, நவம்பர் 30-ம் தேதி வரை பண்டிகை கால தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து, டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி குறைப்பிற்கு முன் இருந்த அதே விலையை மீண்டும் ஆவின் நிறுவனம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய மாநில அரசே ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பின் பயனை மக்களுக்கு அளிக்காமல் இருப்பது வேலியே பயிரை மேய்வது போல் அமைந்துள்ளது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம் என்பதோடு மட்டுமல்லாமல், சட்டத்திற்கு புறம்பானது.

முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஆவின் பால் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில், ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பிற்கு பிந்தைய விலையை உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story