ஜிஎஸ்டி வரி குறைப்பு சிறந்த தீபாவளி பரிசு: எல்.முருகன்

நாட்டு மக்களின் நலனறிந்து, ஜிஎஸ்டி வரி முறையை சீர்செய்துள்ளது நமது மத்திய அரசு என எல்.முருகன் தெரிவித்துள்ளார்
சென்னை ,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தனது சுதந்திர தின உரையின் போது கூறியது போல், 56-வது ஜிஎஸ்டி கூட்டமானது, நாட்டு மக்கள் அனைவருக்குமான சிறந்த தீபாவளி பரிசாக அமைந்துள்ளது.
இதன்படி, முன்பிருந்த நான்கு விதமான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளானது நீக்கப்பட்டு, 5 மற்றும் 18 சதவீத வரி என்ற அடிப்படையில் இரண்டு அடுக்குகளாக மட்டுமே இனி செயல்பாட்டிலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பால் மற்றும் ரொட்டி போன்றவற்றிற்கும், தனிமனித மருத்துவக் காப்பீடு மற்றும் உயிர் காப்பீடு போன்றவற்றிக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளித்திருப்பது மிகுந்த வரவேற்பிற்குரிய அறிவிப்பாக அமைந்துள்ளது. மேலும், நடுத்தர வர்க்க மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான ஜிஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
விவசாயப் பொருட்கள் மீதான வரி 5 சதவீதமாக்கப் பட்டுள்ளதுடன், கல்வி சார்ந்து மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, கல்வி, விவசாயம், மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகள் என்று அனைத்து வகையிலும் நாட்டு மக்களின் நலனறிந்து, ஜிஎஸ்டி வரி முறையை சீர்செய்துள்ளது நமது மத்திய அரசு.
ஜிஎஸ்டி வரி மீதான அடுத்த தலைமுறை சீர்திருத்த நடவடிக்கை மேற்கொண்டு, மிகச் சிறப்பானதொரு தீபாவளி பரிசினை அறிவித்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும், மத்திய நிதி மந்திரி சீதாராமன் அவர்களுக்கும், நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .






