பதிவுத்துறை அலுவலகங்களில் வாய்மொழி உத்தரவின்படி வழிகாட்டி மதிப்பு உயர்வு: டிடிவி தினகரன் கண்டனம்


பதிவுத்துறை அலுவலகங்களில் வாய்மொழி உத்தரவின்படி வழிகாட்டி மதிப்பு உயர்வு: டிடிவி தினகரன் கண்டனம்
x

நிலம் மற்றும் வீட்டு மனை வாங்குவோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பதிவுத்துறை அலுவலகங்களில் தமிழக அரசு நிர்ணயித்த நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பைவிட 30 சதவிகிதம் வரை உயர்த்தியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நிலங்களுக்கான சர்வே எண் மற்றும் தெருவாரியாக வழிகாட்டி மதிப்புகளை பதிவுத்துறை நிர்ணயித்து அதற்கான விவரங்களும் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதற்கு மாறாக 30 சதவிகிதம் வரை வழிகாட்டி மதிப்பை வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் உயர்த்தியிருப்பதாக வரும் செய்திகள் நிலம் மற்றும் வீட்டு மனை வாங்குவோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை நிலவரப்படி வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுவிடமிருந்தோ, தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறையிடமிருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

எனவே, வாய்மொழி உத்தரவு எனும் பெயரில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படும் வழிகாட்டி மதிப்பு உயர்வை உடனடியாக நிறுத்தி வைப்பதோடு, ஏற்கனவே பதிவுத்துறை இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்

1 More update

Next Story