விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா: வெளிச்சத்துக்கு வந்த வடமாநில பெண்ணின் திட்டம்

பெண் ஊழியர்கள் தங்குவதற்காக லாலிக்கல் கிராமத்தில் அடுக்கு மாடி மகளிர் விடுதி உள்ளது.
விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா: வெளிச்சத்துக்கு வந்த வடமாநில பெண்ணின் திட்டம்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்க கூடிய தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவார்கள். இந்த பெண் ஊழியர்கள் தங்குவதற்காக லாலிக்கல் கிராமத்தில் அடுக்கு மாடி மகளிர் விடுதி உள்ளது.

கடந்த 4-ந் தேதி இந்த விடுதி அறை ஒன்றில் குளியல் அறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி அங்கு ரகசிய கேமராவை வைத்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலுகுமாரி(வயது 22) என்பவரை  கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தனது காதலன் ரகசிய கேமராவை கொடுத்து குளியல் அறையில் வைக்க சொன்னதாகவும், தான் கேமரா மற்றும் டிவைஸ் ஆகியவற்றை பை மற்றும் ஷூவில் மறைத்து வைத்து எடுத்து வந்ததாகவும் கூறினார்.

இதையடுத்து அவரது காதலர் என கூறப்பட்ட சந்தோஷ் என்பவரை தேடி போலீசார் பெங்களூரு சென்றனர். இதனிடையே நீலுகுமாரியிடம் நடத்திய தீவிர விசாரணையில் சந்தோஷ் என்பவர் அவரது காதலரே இல்லை என்றும், பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் கோகரா தாலுகா குலாப் நகரை சேர்ந்த ரவி பிரதாப் சிங் (29) என்பவரே அவரது காதலர் என்றும், தனது காதலரை தப்ப வைக்க நீலுகுமாரி நாடகமாடியதும் தெரிய வந்தது.

இதைதொடர்ந்து டெல்லியில் பதுங்கி இருந்த ரவிபிரதாப் சிங்கை போலீசார் கடந்த 6-ந் தேதி இரவு கைது செய்தனர். அவரை விமானத்தில் பெங்களூரு அழைத்து வந்து அங்கிருந்து நேற்று முன்தினம் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

அவை வருமாறு:-

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலுகுமாரியும், பஞ்சாப் மாநிலம் லூதியானா குலாப் நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் சிங் என்பவரின் மகன் ரவிபிரதாப் சிங் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் நீலுகுமாரியை காதலிப்பதாக கூறினார்.

ரவிபிரதாப் சிங்கிடம் பேசுவதை போலவே சந்தோஷ்குமாரிடம் நீலுகுமாரி குப்தா செல்போனில் பேசி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த நீலுகுமாரி, மகளிர் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை தனது காதலன் ரவிபிரதாப் சிங்கிற்கு அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலுகுமாரியிடம் ரவிபிரதாப் சிங் பேசினார். அப்போது நான் சொந்தமாக கார் வாங்க வேண்டும். உன்னை காரில் உட்கார வைத்து ராணி போல பார்க்க வேண்டும். அதற்கு பணம் தேவை என்று காதலி நீலுகுமாரியிடம் நீலி கண்ணீர் வடித்தார். அந்த நேரம் உனக்கு பணம் தர நான் என்ன செய்ய வேண்டும் என்று நீலுகுமாரி கேட்டார். 

நான் ஒரு ஐடியா வைத்துள்ளேன். நீ பெங்களூரு வா என ரவிபிரதாப் சிங் தனது காதலி நீலுகுமாரியிடம் கூறினார். அதை நம்பி அவர் பெங்களூரு சென்றார். அங்கு ரகசிய கேமரா ஒன்றை கொடுத்த ரவிபிரதாப் சிங் இந்த கேமராவை உனது அறையில் வை. உனது அறையில் தங்கி உள்ள பெண்களின் செல்போன் எண்ணை எனக்கு அனுப்பு. நான் அவர்களை மிரட்டி பணம் பறிக்கிறேன். அப்படி பணம் பறித்தால் நாமும் கார் வாங்கி ஜாலியாக வாழலாம் என ஐடியா கொடுத்தார்.

தனது காதலன் வகுத்து கொடுத்த திட்டப்படி ரகசிய கேமராவை நீலுகுமாரி வைத்தது தெரிய வந்தது. இந்த கேமரா விவகாரம் வெளியே தெரிந்ததால் காதலனை தப்ப வைக்க தன்னிடம் பேசி வந்த சந்தோஷ் தான் இதற்கு காரணம் என்று கூறி அவனை மாட்டி விட நீலுகுமாரி திட்டம் போட்டார். நீலுகுமாரி சிக்கி கொண்டதால் ரவிபிரதாப் சிங்கும் தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்தார். ஆனால் நீலுகுமாரி மாற்றி மாற்றி பேசியதை வைத்தும், அவர் ரவிபிரதாப் சிங்கிடம் அடிக்கடி பேசியதை வைத்தும் முக்கிய குற்றவாளி ரவிபிரதாப் சிங் தான் என போலீசார் உறுதி செய்தனர்.

நீலுகுமாரி சிக்கிய தகவல் அறிந்த ரவிபிரதாப் சிங் முதலில் பெங்களூருவில் இருந்து பஞ்சாப் தப்பி சென்றார். பின்னர் டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையம் சென்று அங்கு தங்கும் விடுதியில் இருந்த போது, போலீசார் சென்று கைது செய்தனர். கைதான ரவிபிரதாப் சிங் வேறு எங்கும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com