‘நான் திசை மாறவில்லை; ஒரே திசையில் சென்று கொண்டிருக்கிறேன்’ - உதயநிதி பிறந்தநாள் விழாவில் கமல்ஹாசன் பேச்சு

நாங்கள் சொன்னதை எடுத்து செய்து காட்டியது தி.மு.க. என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“எனக்கு தமிழ் இலவசமாக கற்றுக்கொடுத்த 3 வாத்தியார்கள். தமிழ் உச்சரிப்பை நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், அவருக்கு வசனம் எழுதிக்கொடுத்த கலைஞர் கருணாநிதி தமிழ் உரைநடையையும், கவிஞர் கண்ணதாசன் கவிதைத் தமிழையும் எனக்கு கற்றுக்கொடுத்தார்கள். அந்த உறவுதான் என்னை ஒவ்வொரு மேடையிலும் உயிரே, உறவே, தமிழே என்று முழங்க வைக்கிறது.
‘இவர் ஏன் திடீரென்று திசைமாறிவிட்டார்?’ என்று கேட்கிறார்கள். நான் திசை மாறவே இல்லை. ஒரே திசையில் சென்றுகொண்டிருக்கிறேன். எனக்கு காண்பிக்கப்பட்ட ஒளி, அது காட்டிய பாதையில் நான் பயணம் செய்ததால் மய்யம் உருவானது. இது அரசியல் இக்கட்டுக்காகவோ, சூழலுக்காகவோ நான் சேர்ந்த இடமல்ல. எங்கள் கொள்கைகள் எல்லாம் ஒரே மாதிரியானது.
நாங்கள் ‘இதை நிகழ்த்தியாக வேண்டும்’ என்று போர்குரல் எழுப்புவது இவர்களுக்கு எதிராக அல்ல. தேர்தலில் நாங்கள் போட்டியிட்டாலும், நாங்கள் சொன்னதை எடுத்து செய்து காட்டியது தி.மு.க. நான் இவர்களுடன் சேர்வதா? அல்லது யார் என்றே தெரியாதவர்களுடன் சேர்வதா? இதற்கு பெரிய சிந்தனை, அரசியல் அறிவு எல்லாம் தேவையில்லை.”
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.






