‘தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்’ - அமித்ஷா


தினத்தந்தி 22 Aug 2025 5:16 PM IST (Updated: 22 Aug 2025 10:17 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி தமிழ் மண், மக்கள், மொழி மீது பற்று கொண்டவர் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நெல்லை,

பா.ஜ.க. மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று நெல்லை வந்துள்ளார். அவர் பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

“தமிழ் மண்ணை வணங்கி என்னுடைய உரையை தொடங்குகிறேன். புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன்.

மறைந்த நாகலாந்து கவர்னர் இல.கணேசன் பா.ஜ.க.விற்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தமிழ் மண்ணைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். சி.பி.ராதாகிருஷ்ணன் அடுத்த மாநிலங்களவை கூட்டத்தில் சபாநாயகராக இருப்பார்.

பிரதமர் மோடி தமிழ் மண்ணையும், மக்களையும் எப்போதும் உணர்ந்தவர். தமிழ் மண், மக்கள், மொழி மீது பற்று கொண்டவர். சோழர்களுக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னன் ராஜேந்திரனுக்கு விழா எடுத்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமை ஜனாதிபதி என்ற உயரிய பதவியில் அமர்த்தி பா.ஜ.க. அழகு பார்த்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறித்தவர் பிரதமர் மோடி. ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பிரதமர் மோடி உருவாக்கினார். சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமர், முதல்-அமைச்சர், மந்திரிகள் குற்ற வழக்கில் கைதானால் பதவியில் நீடிக்க கூடாது. 30 நாட்கள் சிறையில் இருக்கும் முதல்-அமைச்சர், மந்திரிகளை பதவிநீக்கம் செய்யும் சட்டத்தை மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார். நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஸ்டாலின் கருப்புச் சட்டம் என பேசுகிறார். செந்தில் பாலாஜியும், பொன்முடியும் சிறை சென்றாலும் பதவியில் நீடித்தனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 18 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றது. பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. 21 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. தமிழகத்தில் 2026-ல் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஆட்சிதான் அமையப்போகிறது. பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி தமிழக மக்களை மேம்படுத்தும்.

தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் நீளமாக உள்ளது. டாஸ்மாக், போக்குவரத்து, கனிம வளம் என பல துறைகளில் தி.மு.க. அரசு ஊழல் செய்து வருகிறது. உதயநிதியை முதல்-அமைச்சராக்குவது தான் தி.மு.க. கூட்டணியின் ஒரே லட்சியம். சோனியா காந்திக்கு அவர் மகன் ராகுல் காந்தியை பிரதமராக்குவது தான் ஒரே லட்சியம். நான் சொல்கிறேன், ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது.”

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Related Tags :
Next Story