தமிழ்நாட்டில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டினை நீக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம்
உர வகைகள் தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி பெருக வேண்டுமானால் விவசாயிகளுக்கு தாராளமாக உரங்கள் கிடைப்பதையும், இயந்திரக் கருவிகள் வழங்குவதையும், நீர்ப்பாசன வசதிகள் மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு. ஆனால், தற்போது நிலவும் யூரியா தட்டுப்பாட்டினைப் பார்க்கும்போது, மாநில அரசு தனது கடமையிலிருந்து தவறிவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொண்டுள்ளனர் என்பதும், சிறு தானியங்கள் சாகுபடியிலும் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இதற்கான உரங்கள், குறிப்பாக யூரியா கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது நிலவுகிறது.
தமிழ்நாட்டின் தேவையை நிறைவேற்றும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்து வரும் நிலையில், கள யதார்த்தம் என்பது இதற்கு முற்றிலும் முரணாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சாகுபடி நேரத்தில் யூரியா இருப்பு இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது திகைக்கின்றனர். உரிய நேரத்தில் உரங்கள் மற்றும் யூரியா வழங்கப்படவில்லை என்றால் பயிரின் வளர்ச்சி குன்றிப் போய்விடும் என்று தெரிந்தும் அவற்றை இருப்பில் வைக்காதது கண்டிக்கத்தக்கது.
விவசாயிகள் தங்களுடைய குறைகளைச் சுட்டிக்காட்ட தனி வலைதளப் பக்கம் உள்ளதாகவும், அதில் உரம் மற்றும் யூரியா கிடைப்பதில்லை என்று சுட்டிக்காட்டியதற்கு போதுமான அளவில் இருப்பு இருப்பதாகத் தெரிவித்து அந்தக் கடைகளின் பட்டியலை வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ளதாகவும், இருப்பினும் அந்தக் கடைகளுக்குச் சென்றால் இருப்பு இல்லை என்ற நிலைதான் நிலவுவதாகவும், இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்விதப் பயனும் இல்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாறாக, உரங்களின் பயன்பாட்டை குறைக்க ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும், உரங்களை பதுக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுகின்றனர் என்றும், இதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
யூரியா உள்ளிட்ட உர வகைகளை பதுக்கி வைப்பது என்பது தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதோடு, கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிலையையும் உருவாக்கும். இதன் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகள்தான். உரத் தட்டுப்பாட்டிற்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டிய கடமையும், உர வகைகள் தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு இருக்கிறது.
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்" என்ற மகாகவி பாரதியாரின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி யூரியா உள்ளிட்ட உரங்கள் பதுக்கப்படுவதைத் தடுத்து தமிழ்நாட்டில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டினை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






