கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7 ஆயிரத்து 135 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
மைசூரு,
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. இதேபோல், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு 4-வது முறையாக கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய 2 அணைகளும் நிரம்பின. 6-வது நாளான நேற்றும் கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவான 124.80 அடியுடன் இருந்தது.
இந்தநிலையில், நேற்று கே.ஆர்.எஸ். அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை ெபய்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரத்து 328 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6 ஆயிரத்து 392 கனஅடியாக அதிகரித்தது. இதேபோல், நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரத்து 72 கனஅடியாக இருந்த தண்ணீர் திறப்பு நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 135 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.இதேபோல், கபினி அணைக்கு நேற்றுமுன்தினம் வினாடிக்கு ஆயிரத்து 851 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு ஆயிரத்து 278 கனஅடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு ஆயிரத்து 350 கனஅடி திறக்கப்பட்ட நிலையில் நேற்று காலை வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 2,283.84 ஆக இருந்தது. அதுவே நேற்று சற்று குறைந்து 2,283.82 அடியாக இருந்தது. இந்தநிலையில், இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 7 ஆயிரத்து 135 கனஅடி நீர் தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 420 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் மழை பொழிவு காரணமாக நேற்று சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.






