இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: தவறான பொருளாதார கொள்கைகளின் நேரடி விளைவு - அமைச்சர் மனோ தங்கராஜ்

கோப்புப்படம்
ரூபாய் மதிப்பை சீராக்க தெளிவான, வெளிப்படையான திட்டத்தை மக்கள் முன் வைக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
சென்னை,
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.90 என்ற வரலாறு காணாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ந்திருப்பது, மோடி அரசின் பொருளாதார நிர்வாகம் எந்த அளவிற்கு தோல்வியடைந்திருக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. இது வெறும் எண்ணிக்கை அல்ல; அரசின் நிதிக் கொள்கைகளில் ஏற்பட்ட கடுமையான தவறுகளை சுட்டிக்காட்டும் அடையாள குறியீடு.
பிரதமர் இந்த நிதிச் சூழலுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அலங்கார வார்த்தைகளால் பேசி தப்பிக்காமல், ரூபாய் மதிப்பை சீராக்க ஒரு தெளிவான, நம்பகமான, வெளிப்படையான திட்டத்தை உடனடியாக மக்கள் முன் வைக்க வேண்டும். எந்த நாட்டின் நாணயமும் ஒரே இரவில் சரிவதில்லை. 10 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் தவறான பொருளாதார கொள்கைகளின் நேரடி விளைவு தான் இது.
இந்திய மக்களுக்கு தேவையானது திறமையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் தகுதியுடைய தலைமையே தவிர, கண்கவர் விளம்பர அரசியலும் வெற்று வாக்குறுதிகளும் அல்ல. இந்த பரிதாப நிலைக்கு நம்மை கொண்டு வந்த நிதி மந்திரி மக்கள் முன் பதில் சொல்ல வேண்டும். உடனடியாக உரிய தீர்வு காண எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
ரூபாய் வீழ்ச்சி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் தொடங்கி இந்திய மக்களின் குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில ஆகும் செலவு வரை அனைத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. கல்விக் கடன் சுமை மேலும் பெருகும் அபாயம் உருவாகியுள்ளது. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் இதன் தாக்கம் கடுமையாக இருக்கும். விமான டிக்கெட் முதல் ஹோட்டல் வாடகை, அன்றாட செலவுகள் வரை அனைத்தும் கடுமையாக உயரும். சிம் கார்டு, உணவு, உள்ளூர் போக்குவரத்து போன்ற சிறிய செலவுகள்கூட இன்று பெரிய சுமையாக மாறியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






