வெளிமாநிலங்களுக்கு தமிழக அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்

வரி செலுத்தாததால் அபராதம் விதிக்கும் கேரளா, கர்நாடக அரசுகளுக்கு சில ஆம்னி பஸ் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சென்னை,
ஆம்னி பஸ்கள் பல்வேறு மாநில விதிமுறைகள் மற்றும் வரி சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதனை கண்டித்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே இன்று முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளது. அந்தவகையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி இடையே ஓடக்கூடிய 600 பஸ்கள் இன்று மாலை முதல் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதேசமயம் தமிழகத்திற்குள் ஆம்னி பஸ்கள் வழக்கம்போல் இயங்கும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன.சில ஆம்னி பஸ் சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களை முழுமையாக இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
வழக்கமாக வார இறுதி நாட்களில் இயக்கப்படும் 456 விரைவு பஸ்களை இன்று முதல் இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிற்கு 183 பஸ்களும் கேரளாவிற்கு 85 பஸ்களும், ஆந்திராவிற்கு 70 பஸ்களும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






