பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது வழக்கு


பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது வழக்கு
x

கோப்புப்படம் 

224 கல்லூரிகள் பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2023-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை தகுதியற்ற கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது, தகுதியற்ற பேராசிரியர்களை நியமனம் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை மாநகர லஞ்ச ஒழிப்பு 4-வது பிரிவு அதிகாரிகள் இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குனரான இளைய பெருமாள், துணை இயக்குனர் சித்ரா, முன்னாள் பதிவாளர்கள் ரவிக்குமார், பிரகாஷ், மற்றும் நிர்வாக பொறுப்பில் இருந்த கிரிதேவ், மார்சல் அந்தோணி, மாலதி, பிரகதீஸ்வரன், சிலாஸ் சற்குணம், மாரிச்சாமி, கண்ணன், இன்னொரு ரவிக்குமார் மற்றும் 4 என்ஜினியரிங் கல்லூரி நிர்வாகிகள் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-

என்ஜினியரிங் கல்லூரிகளில் முறையாக ஆய்வு நடத்தாமல் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் சதி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நிலைக்குழு, இணை இயக்குநர் மற்றும் ஆய்வுக் குழுவினர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எளிதில் ஆய்வு செய்யும் வகையில் உள்ள ஆசிரியர் தரவு தளத்தைச் சரிபார்க்கத் தவறியதன் மூலம், தனியார் என்ஜினியரிங் கல்லாரிகளுடன் கூட்டு சேர்ந்து முறைகேடு செய்துள்ளனர். பேராசிரியர்கள் பலர் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றியது போன்று தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. சென்னையில் பணியாற்றிய குறிப்பிட்ட என்ஜினியரிங் கல்லூரியின் 34 முழுநேர பேராசிரியர்கள் இன்னொரு கல்லூரியிலும் பணியாற்றியது போன்று கணக்கு காட்டப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் 2023 -2024-ம் ஆண்டில் செயல்பட்ட 480 என்ஜினியரிங் கல்லூரிகளில், 224 கல்லூரிகள் பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் சுமார் 47 சதவீத கல்லூரிகளில் மோசடி, சதி, ஏமாற்றுதல் மற்றும் கிரிமினல், நம்பிக்கைத் துரோகம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் இந்த விஷயங்களில், தீய நோக்கத்துடன் செயல்பட்டு இருக்கிறார்கள். ஆய்வின்போது பேராசிரியர்களின் பெயர், அசல் ஆதார் அட்டை, பான் அட்டை, கல்வித் தகுதிச் சான்றிதழ் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களைச் சரி பார்க்கத் தவறி உள்ளனர்.

அதே நேரத்தில் என்ஜினியரிங் கல்லூரிகள் தங்களது அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கும் சட்ட விரோதமாக இவர்கள் துணை போயிருக்கிறார்கள்.

இதன் மூலம் தகுதியற்ற என்ஜினியரிங் கல்லூரிகளை 2023-2024-ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் முறைகேடாக அங்கீகரித்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலாவது குற்றவாளி முதல் 10-வது குற்றவாளி வரையிலான அதிகாரிகள் தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள் தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று முழுமையாகத் தெரிந்திருந்தும், அவர்களின் முறைகேட்டுக்கு துணை புரிந்துள்ளனர்.

11-வது குற்றவாளி முதல் 17-வது குற்றவாளி வரையில் தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளுடன் கூட்டுசேர்ந்து, ஒரே நேரத்தில் 10 வெவ்வேறு கல்லூரிகளில் முழுநேர ஆசிரியர்களாகப் பணிபுரிவதாகத் தகவல் அளித்து உள்ளனர். இதன் மூலம் ன் மூலம் குறிப்பிட்ட என்ஜினியரிங் கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்காக போலியான பேராசிரியர்கள் அங்கு பணிபுரிவதாக தவறான தகவலை அதிகாரிகள் வழங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆவணங்களைத் திருத்தி உருவாக்குதல், ஏமாற்றுதல் மற்றும் கிரிமினல், நம்பிக்கைத் துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் உறுதியாகி இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து 7 சட்டப்பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை பல்கலைக்கழகத்திற்கு கடிதம் மூலமாகவும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அண்ணா பல்கலைகழகத்தில் அரங்கேறி உள்ள இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி மோசடி தகவல்களை திரட்டுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

1 More update

Next Story