விமானம் செங்குத்தாக புறப்படுவது சாத்தியமா? - ஆராய்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி. முன்னேற்றம்

செங்குத்து புறப்பாடு - தரையிறக்கத்துக்கான ஹைப்ரிட் ராக்கெட் உந்துவிசையை உருவாக்குவதில் சென்னை ஐ.ஐ.டி. முன்னேற்றம் கண்டிருக்கிறது.
விமானத் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்காக மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை ஐ.ஐ.டி. ‘ஹைப்ரிட்’ ராக்கெட் உந்துவிசையை பயன்படுத்தி விமானம் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனத்தை செங்குத்தாக புறப்படச் செய்வது, தரையிறங்கச் செய்வது எப்படி? என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சியில் விமானம், வான்வழி வாகனத்தின் செங்குத்து புறப்பாடு - தரையிறக்கத்துக்கான ஹைப்ரிட் ராக்கெட் உந்துவிசையை உருவாக்குவதில் சென்னை ஐ.ஐ.டி. முன்னேற்றம் கண்டிருக்கிறது.
இந்த ராக்கெட் உந்துவிசையை மெய்நிகர் உருவகப்படுத்துதலோடு இணைத்து சென்னை ஐ.ஐ.டி. சோதனை நடத்தி இருக்கிறது. இந்த சோதனையில் மென்மையான தரையிறக்கத்துக்கு தேவையான வேகத்தை ஆராய்ச்சியாளர்களால் அடைய முடிந்துள்ளது.
சாதாரண ராக்கெட் உந்துவிசையை இதற்கு பயன்படுத்தும்போது, அதற்கான பராமரிப்பு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விமானங்கள், ஆளில்லா வான்வழி வாகனங்களில் ஹைப்ரிட் ராக்கெட் உந்துவிசையில் இயங்கும் தளத்தை சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. விண்வெளி என்ஜினீயரிங் துறை பேராசிரியர் பி.ஏ.ராமகிருஷ்ணா கூறும்போது, ‘செங்குத்து புறப்பாடு - தரையிறக்க அமைப்பு வணிக பயன்பாட்டுக்கான தொழில்நுட்ப தயார்நிலையை அடைந்தவுடன் சிவில், ராணுவ விமான போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பெரிய விமான நிலையம், விமானத்தளம் ஆகியவை மட்டுமன்றி பல்வேறு இடங்களுக்கு விமான போக்குவரத்தை பரவலாக்க செங்குத்து புறப்பாடு - தரையிறக்க அமைப்பு உதவிகரமாக இருக்கும்' என்றார்.






