தரமற்ற கட்டடங்களை கட்டி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதுதான் அரசின் சாதனையா? - டி.டி.வி. தினகரன்


தரமற்ற கட்டடங்களை கட்டி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதுதான் அரசின் சாதனையா? - டி.டி.வி. தினகரன்
x

கோப்புப்படம் 

கட்டுமானப் பணிகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்த பின்னரே திறப்பு விழா காண வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை

தரமற்ற கட்டடங்களை கட்டி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதே போல, சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நாமக்கல் அருகே மேம்பாலம் திறக்கப்பட்ட நாளிலேயே விரிசலுக்குள்ளான செய்தியில் தொடங்கி, அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து விபத்துக்குள்ளாகும் அரசுப்பள்ளி வகுப்பறைகள், கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களில் தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலம் வரை தொடர்ந்து ஏற்படும் விபத்துகளும், விரிசல்களும் தி.மு.க.வின் திராவிட மாடல் அரசின் கட்டுமான லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

கட்டுமானப் பணிகளின்போது அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டிய தி.மு.க. அரசு, அதற்கு நேர்மாறாக எப்போது திறப்பு விழா நடத்தலாம் ? எவ்வாறெல்லாம் விளம்பரம் செய்யலாம் ? என்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அதோடு, கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே கட்டடங்களும், பாலங்களும் விபத்துக்குள்ளாவதும், அதனை சீரமைக்கிறோம் எனும் பெயரில் மேலும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருவதன் மூலம் தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, அரசுப்பள்ளி வகுப்பறைகள் தொடங்கி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் வரை நடைபெறும் கட்டுமானப் பணிகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்த பின்னரே திறப்பு விழா காண வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story