திருவள்ளூரில் பத்திரப்பதிவு எழுத்தர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை - வீட்டிலேயே அமர்ந்து மது அருந்திய கொள்ளையர்கள்

கொள்ளையர்கள் பணம், நகையை கொள்ளையடித்த பிறகு, வீட்டிலேயே அமர்ந்து மது அருந்திவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கர்லப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் பழனி என்பவர் பத்திரப்பதிவு எழுத்தராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பழனி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் இருந்த 100 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், பட்டுப்புடவைகள், 1 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இது குறித்து தகவலறிந்து போலீசார் பழனியின் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் பணம், நகையை கொள்ளையடித்த பிறகு, வீட்டிலேயே அமர்ந்து மது அருந்திவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






