தர்மபுரி: கந்த சஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் நடைபெற்ற கந்த சஷ்டி சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அந்தந்த பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சுவாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு உபகார பூஜைகளும், அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்வாக, கந்த சஷ்டியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலை 108 முறை வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சூரசம்கார விழா நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி
பாப்பாரப்பட்டி ஸ்ரீ புதிய சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகளும், சுவாமிக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் கந்த சஷ்டி கவசம் பாடி வழிபட்டனர். பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சூரசம்கார விழா நடைபெற்றது. இதில் சூர பத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று தர்மபுரி எஸ்.வி. ரோடு சுப்பிரமணிய சுவாமி கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி சன்னதி, இண்டூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், கம்பைநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், லளிகம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.






