கரூர் கூட்டநெரிசல் சம்பவம்; நடிகர் அஜித்தின் கருத்து வரவேற்கத்தக்கது - துரை வைகோ


கரூர் கூட்டநெரிசல் சம்பவம்; நடிகர் அஜித்தின் கருத்து வரவேற்கத்தக்கது - துரை வைகோ
x

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை,

த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், நடிகர் அஜித் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கரூர் சம்பவம் குறித்து பேசியிருந்தார்.

அதில், “கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு. ரசிகர்களின் அளவு கடந்த எல்லையற்ற அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது. கூட்டத்தால் நாம் மிகவும் வெறித்தனமாகி விடுகிறோம். இது முழு சினிமா துறையையும் மோசமாக காட்டுகிறது. இந்த மீடியாவும் படங்களின் முதல் நாள் முதல் ஷோவை பெரிதாக்கி காட்டுகிறது. இது ரசிகர்கள் மனதை மாற்றுகிறது” என்று பேசியிருந்தார்.

இதனிடையே அஜித்தின் கருத்துக்கு விஜய் ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான நடிகர் அஜித்தின் கருத்து வரவேற்கத்தக்கது என ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

“அஜித் கூறிய கருத்தையே நானும் முன்பு கூறியிருந்தேன். மக்களுக்கு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். த.வெ.க. பிரசார கூட்டத்திற்கு குழந்தைகள், கர்ப்பிணிகளை அழைத்து வர வேண்டாம் என்று அந்த கட்சியினர் கூறியிருந்தபோதும், அதை மீறி நிறைய பேர் சென்றுள்ளனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

கரூர் சம்பவம் மட்டுமல்ல, கர்நாடகத்தில் ஐ.பி.எல். வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதே போல் உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் ஆன்மிக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அரசியல் நிகழ்வு மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் இதுபோன்ற கூட்ட நெரிசல்களில் உயிரிழக்கின்றனர். எனவே மக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும். அந்த கருத்தை அஜித்தும் கூறியிருக்கிறார். அவரது கருத்து வரவேற்கத்தக்கது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story