கரூர்: தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து விழுந்த மாணவி படுகாயம்

தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து விழுந்த மாணவி படுகாயம் அடைந்தார்.
கரூர்,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர் ராஜேஷ் கண்ணா. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி குளோரா செல்சியா. இவர்களது 13 வயது மகள் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமி வழக்கம் போல இன்று பள்ளிக்குச் சென்ற நிலையில், மதியம் சுமார் 3.30 மணியளவில் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து விட்டதாக பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மாணவியை, ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இரண்டாவது மாடியில் இருந்து விழுந்ததில் மாணவி படுகாயமடைந்துள்ளார். மாணவிக்கு இடுப்புக்கு கீழ் பகுதி செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது தற்கொலைக்கு முயன்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






