கேரளாவில் இருந்து கம்பத்திற்கு லாரியில் கழிவுகளை ஏற்றி வந்த கேரள வாலிபருக்கு அபராதம்

லாரியில் குழந்தைகளுக்கு பயன்படுத்திய டயபர்கள் மற்றும் குப்பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கம்பம்,
தேனி மாவட்டம் கம்பம், கேரள மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளது. இதனால் கேரளாவில் இருந்து குப்பைக்கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து, கம்பத்தில் தமிழக எல்லையில் கொட்டிவிட்டு செல்வது தொடர்கதையாக இருந்தது. இதையடுத்து கேரளாவில் இருந்து குப்பைகளை கொண்டுவந்து, தமிழக எல்லையில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட கம்பம்மெட்டு வன சோதனை சாவடியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில், குழந்தைகளுக்கு பயன்படுத்திய டயபர்கள் மற்றும் குப்பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர், இடுக்கி மாவட்டம் அணைக்கரா பகுதியை சேர்ந்த சிஜோமோன் மாத்யூ (வயது 33) என்பதும், தனது வீட்டு குப்பைகளையும், டயபர்களையும் லாரியில் ஏற்றி கம்பம் பகுதியில் கொட்டுவதற்கு வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிஜோமோன் மாத்யூ மீது கம்பம் மேற்கு வனவர் ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து, அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் இதுபோன்று கழிவுகளை ஏற்றி வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து விடுத்ததுடன், லாரியை கழிவுகளுடன் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பினார்.






