கிருஷ்ணகிரி: குடோனில் திடீர் தீ... பல பொருட்கள் சேதம்

இந்த தீ விபத்து குறித்து ஓசூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வெங்கடேஷ் நகரில் முனுசாமி (வயது 50) என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் சேமிப்பு குடோன் உள்ளது. ஓசூர் பகுதியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படும் இரும்பு, அலுமினியம், பிளாஸ்டிக், காப்பர், பழைய பேப்பர்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் இந்த குடோனுக்கு கொண்டு வந்து பின்னர் அதனை தரம் பிரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென குடோனின் வெளிப்புறத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களில் தீப்பிடித்தது பின்னர் இந்த தீயானது மெல்ல மெல்ல குடோனின் உள்ளேயும் பரவி அங்கிருந்த பழைய பொருட்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் அப்பகுதி கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த தீவிபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த ஓசூர் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து ஓசூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






