‘தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது’ - பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு,
ஈரோட்டில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“கடலூரில் ஜனவரி 9-ந்தேதி நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி குறித்து எங்கள் தெளிவான முடிவை அறிவிப்பாக வெளியிடுவோம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
நேற்று அவினாசி, திருப்பூர் மாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்தோம். எல்லா இடங்களிலும் மக்கள் பல்வேறு விதமான கோரிக்கைகளை எங்களிடம் முன்வைக்கிறார்கள். திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளில் நெசவாளர்கள், சிறு, குறு தொழில் செய்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். மின்கட்டண உயர்வு, வரிவிதிப்பு ஆகியவற்றால் பெரும்பாலான தொழில்கள் முடங்கியுள்ளன.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது டாஸ்மாக் மற்றும் போதைப்பொருள் பழக்கம்தான்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






