கங்கைகொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்...!

பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
Live Updates
- 27 July 2025 9:07 AM IST
கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்க தயார் நிலையில் உள்ள இறங்கு தளம்
திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்க கங்கைகொண்ட சோழபுரத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் தயார் நிலையில் உள்ளது.
- 27 July 2025 9:05 AM IST
திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள்
பிரதமர் மோடி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். இதற்காக திருச்சி விமான நிலையத்தில் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
- 27 July 2025 8:23 AM IST
கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் பிரதமர் மோடி
பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். மாலத்தீவில் இருந்து ராணுவ விமானம் மூலம் நேற்று இரவு தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் இரவு 10 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கிய பிரதமர் மோடி இன்று காலை கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறார். செல்லும் வழியில் பிரதமர் மோடி ரோடு-ஷோ நடத்த உள்ளார்.
இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.
அங்கு முதலாம் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழீசுவரர் கோவிலுக்கு (பிரகதீஸ்வரர் கோவில் - பெருவுடையார் கோவில் - சிவன் கோவில்) பிரதமர் மோடி செல்கிறார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது.
பின்னர் வாரணாசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரை கொண்டு கங்கைகொண்ட சோழீசுவரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், கோவிலில் அமர்ந்து தியானம் செய்ய உள்ளார். மேலும், கோவில் சிற்பங்களையும் , தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
பின்னர், நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். முதலாம் ராஜேந்திரசோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆடி திருவாதிரை விழா கொண்டாடப்படும் நிலையில் அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.அப்போது, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியில் பிதமர் மோடி கலந்து கொள்கிறார். பின்னர், மதியம் 1.45 மணியளவில் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி 2.30 மணியளவில் திருச்சி செல்கிறார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி கங்கைகொண்ட சோழபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.









