தொடர் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தொடர் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ஊட்டி,

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பலரும் ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா வந்தனர். அதன்படி ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

அரசு தாவரவியல் பூங்காவில் 3 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் உள்ளது. அங்குள்ள நீண்ட புல்வெளியில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் உள்ள பூக்களை பார்த்து ரசித்தனர். மேலும் இத்தாலியன் பூங்காவை சுற்றி பார்த்தனர்.

இதேபோல் ஊட்டி ஏரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதமான காலநிலை நிலவியதால் நீண்ட நேரம் படகு சவாரி செய்தனர். மேலும் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அத்துடன் படகு இல்லத்தில் உள்ள குதிரையில் ஏறி சவாரி செய்தனர். அருகில் இருந்த குழந்தைகளுக்கான ரெயிலில் குழந்தைகள் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

ஊட்டி அடுத்த பைகாரா படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் ஊட்டி ரோஜா பூங்கா, சூட்டிங் மட்டம், பைன் பாரஸ்ட், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உள்பட பல இடங்களிலும் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. பல இடங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு நீண்ட நேரம் பொழுதை கழித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை, ஊட்டி-கூடலூர் சாலை உள்பட பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

1 More update

Next Story