முதல்-அமைச்சர் குறித்த அவதூறு வழக்கில் சிக்கியவரை கைது செய்ய தடை ; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மதுரை,
நெல்லை மாவட்டம் அளவந்தான்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வின் அந்தோணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நெல்லை மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தமிழக முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தனர். இந்த சர்ச்சைக்குரிய மிரட்டல் வீடியோவை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டேக் செய்தேன். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னையும் சேர்த்து உள்ளனர். அந்த வீடியோவை நான் எடிட் செய்து பதிவேற்றம் செய்யவில்லை. எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி, இந்த வீடியோ பதிவேற்றம் செய்த நடவடிக்கைக்கும், மனுதாரருக்கும் எந்த தொடர்பும் இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு மனுதாரர் வழங்குவார். மேலும் கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளுக்கும் மனுதாரர் கட்டுப்படுவார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என வாதாடினர். விசாரணை முடிவில், மனுதாரரை வருகிற 22-ந் தேதி வரை கைது செய்யக் கூடாது. இந்த மனு குறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 22-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.






