சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதனால் கோர்ட்டு உத்தரவை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில் நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை எச்சரித்தது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, மனுதாரர் சிஆர்பிஎப் (மத்திய தொழிற்பிரிவு பாதுகாப்புப்படை) வீரர்கள் பாதுகாப்புடன் சென்று முருகன் கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பக்தர்கள், இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






