மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி - வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்

திருக்கல்யாண நிகழ்வைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் பூப்பல்லக்கில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முதலில் கோ பூஜை நடந்தது. காலை 8.30 மணிக்கு யாகசாலையில் உள்ள கலச தீர்த்தங்களை கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகம், கலசங்கள் ஆவாகனம், வேள்வி பூஜை நடைபெற்றது.
ஆதி மூலஸ்தானத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபம் வாழைமரம், மாவிலை தோரணம், தென்னம்பாளை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
காலை 10 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாண மண்டபத்திற்கு மணவறை ஊஞ்சலில் எழுந்தருளினார். சுவாமி வெண்பட்டு உடுத்தியும், வள்ளி பச்சை பட்டு உடுத்தியும், தெய்வானை சிவப்பு பட்டு உடுத்தியும் தங்க நகைகள் அணிந்தும் மணமேடையில் காட்சியளித்தனர். பின்னர் சுவாமிக்கும், வள்ளி தெய்வானைக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கணபதி வேள்வி, தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. 11.20 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி - வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா..’ என பக்தி முழக்கமிட்டனர். சிவாச்சாரியார்கள் உரலில் மஞ்சள் இடித்து உடுக்கை அடித்து பொற்சுன்ன பாடலை தமிழில் பாடி மருத தீர்த்தம் ஊற்றி மஞ்சளை வள்ளி தெய்வானைக்கு அணிவித்தனர்.
தொடர்ந்து இசைக்கலைஞர்களும் முருகப்பெருமானுக்கு பிடித்த பத்மாவதி ஊஞ்சல் ஆனந்த பைரவி ராகத்தில் நாதஸ்வரம் வாசித்தனர். மணமக்களுக்கு குடை பிடித்து விசிறி வீசப்பட்டது. பக்தர்கள் மொய்ப்பணம் வைத்து வழிபட்டனர். பாதகாணிக்கை செலுத்துதல் பூஜை, மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் பூப்பல்லக்கில் வீதிஉலா வந்தார்.
கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏழு நாட்கள் சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள், முருகப்பெருமானின் திருக்கல்யாண உற்சவத்தை கண்டு தரிசனம் செய்தபின், இந்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்தனர்.






