மயிலாடுதுறை: பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ‘அரோகரா’ முழக்கத்துடன் நடைபெற்ற திருக்கல்யாணம்

மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த சுவாமி-அம்பாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை: பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ‘அரோகரா’ முழக்கத்துடன் நடைபெற்ற திருக்கல்யாணம்
Published on

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், கடம்ப மாலை, மதங்க அணிகலன்களுடன் முருகப் பெருமான் காட்சியளிக்கும் புண்ணிய தலமாகும்.

பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவிலில் இந்த சஷ்டி பெருவிழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கடந்த 27 ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. கந்த சஷ்டி 7 ஆம் நாளான (நிறைவு நாளான) நேற்று திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் திருமணக்கோலத்தில் வசந்தமண்டபத்திற்கு ஊஞ்சல் மணமேடையில் எழுந்தருளினர். பக்தர்கள் விநாயகர் ஆலயத்தில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்து வேதியர்கள் மந்திரம் முழங்க ஹோமம் வளர்க்கப்பட்டது. பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சி, நலுங்கு வைக்கும் நிகழ்வு, மாலை மாற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமியும் அம்பாளும் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர் . இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது.

திருவெண்காடு

திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு முருகன், வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து உற்சவர்கள் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் ஹோமம் நடந்தது. இதனைத் தொடர்ந்து அர்ச்சகர் ராமநாத சிவாச்சாரியார் மங்கள நாணை அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் சரணகோஷம் எழுப்பியபடி முருகப்பெருமானை வழிபட்டனர். கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம். என். ஆர். ரவி, அறங்காவலர்கள் தாண்டவ மூர்த்தி, நாகராஜன், சுந்தரி ரத்தினவேல், நாகப்பிரகாஷ் ராஜன், தலைமை அர்ச்சகர் கந்தசாமி சிவாச்சாரியார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நாங்கூர் நம்புவாருக்கு அன்பர் கோவிலில் கந்த சஷ்டி உற்சவம் நடந்தது. இதனை ஒட்டி முருகப்பெருமான் திரு வீதி உலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com