மெட்ரோ ரெயில் விவகாரம்; தி.மு.க.வின் மற்றொரு நாடகம் - செல்லூர் ராஜு குற்றச்சாட்டு

மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிய அறிக்கையில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை,
மதுரையில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“மதுரைக்கு வர வேண்டிய மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு தடுத்துவிட்டதாகவும், அதற்காக தி.மு.க. போராடுவதாகவும் சிலர் செய்தி வெளியிடுவார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. இது தி.மு.க.வின் மற்றொரு நாடகம். மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட DPR அறிக்கையில் நிறைய குளறுபடிகள் இருக்கின்றன.
மெட்ரோ ரெயில் கொள்கை 2017-ன்படி, மெட்ரோ திட்டம் கொண்டு வருவதற்கு 17 லட்சம் மக்கள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க. அரசு 15 லட்சம்தான் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிறது. இந்த காலகட்டத்திற்குள் முறையாக DPR அறிக்கையை தயார் செய்திருக்க முடியாதா? மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் ஆலோசனை கேட்டு, தொழில்நுட்ப பிழைகளை சரிசெய்து அறிக்கையை அனுப்பியிருக்கலாம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






