அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - 2025 நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் கோப்பை 2025 போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கும் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துகள், பாராட்டுகள். அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் விளையாட்டுத்துறை உட்கட்டமைப்புக்கு ரூ.170.31 கோடி ஒதுக்கினார்கள்.

கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் உட்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.601.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். விளையாட்டுத்துறைக்கு மொத்தமாக ரூ.1,945.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். தமிழகம் போல் வேறு எந்த மாநிலத்திலும் விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற உதவி கிடைப்பதில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

உங்களுக்கான அத்தனை வாய்ப்புகளையும் உருவாக்குகிறோம். விளையாட்டில் கவனம் செலுத்தி, வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித் தாருங்கள். திமுக ஆட்சி விளையாட்டுத்துறையின் பொற்காலம். விளையாட்டு துறையை நானே கவனிக்கலாம்னு ஏக்கம் வந்து இருக்கு.

தமிழ்நாட்டில் இத்தனை திறமையான இளைஞர்களை அடையாளம் காண்பதற்காக உழைத்த, உழைத்து கொண்டிருக்கக்கூடிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். இளைஞர்களின் நலனையும், விளையாட்டுத் துறையையும் 'The Young and Energetic Minister'-யிடம் ஒப்படைத்தால் அது எப்படி வெற்றிகரமாக அமையும் என்பதற்கு தமிழ்நாடு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com