கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்

கவர்னர் ஆர். என்.ரவி மக்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்
சென்னை,
அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் ரசாயனப் போதைப்பொருள்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது’’ எனக் கிண்டி கமலாலயத்தில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.
தென்னை மரத்தில் தேள் கொட்டியதற்குப் பனை மரத்தில் நெறிக் கட்டும் என்ற பழமொழியைப் போல ‘தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டிற்கும் கவர்னர் எதுவும் செய்யவில்லை’ எனச் சொல்லி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் கையால் பட்டம் பெற மறுத்து அவமானத்தைச் சந்தித்த கவர்னர் ரவிக்கு 24 மணி நேரம் கழித்து நெறி கட்டியிருப்பதைத்தான் அவருடைய அறிக்கை வெளிக்காட்டுகிறது.
இன்னொரு பக்கம் சுதந்திர தினத்திற்காகத் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு கவர்னர் ரவி அழைப்பு விடுத்ததை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருக்கின்றன. இப்படி விரக்தியில் அறிக்கை விட்டிருக்கிறார் கவர்னர் . அதில் சொல்லப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கெனவே ஆதாரத்தோடு பதில் அளிக்கப்பட்டுவிட்டது.
நாட்டின் சுதந்திர தினத்திற்கு விடுத்துள்ள செய்தியில் கூட நாகரிகம் இல்லாமல் ஆதாரமில்லாமல், மனம் போன போக்கில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். ஆர். என்.ரவி ஜனநாயக முறையில் மக்களின் பெருவாரியான ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார். அத்தனை நெருக்கடிகளையும் உச்ச நீதிமன்றம் வரை சென்று நாம் நசுக்கினோம்.
அமைச்சர்கள் நியமனம், மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, கவர்னர் உரையில் ஆரியத் திணிப்பு என எதிலாவது கவர்னர் ரவி வெற்றி பெற்றிருக்கிறாரா? அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை.
கவர்னரின் அறிக்கையில் ’பாஜகவுக்கு வாக்களியுங்கள்’ என்ற ஒற்றை வார்த்தை மட்டும்தான் இல்லை. மற்றபடி ஆதாரங்கள் இல்லாமல் அவதூறுகளை வீசும் அசிங்கமான அரசியல்தான் செய்திருக்கிறார்.
ஒன்றிய அரசு லட்சக்கணக்கான கோடிகளை தமிழ்நாட்டுக்கு நிதிப் பகிர்வு வழங்கியது எனச் சொல்லியிருக்கிறார். இந்த ஆண்டு மோடி அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் ’தமிழ்நாடு’ என்ற பெயரே இல்லை என்பது கூட தெரியாமலா ஓர் கவர்னர் இருப்பார்? இந்த போட்டோஷாப் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது என்று தெரிந்தும் அறிக்கை வெளியிட்டுத் திருப்திப்பட்டுக் கொள்வது எல்லாம் ஆகச் சிறந்த நகைச்சுவை.கவர்னரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார்.
தமிழ்நாடு பற்றிய தேசியப் புள்ளி விவரங்கள் கல்வியிலும், சமூக-பாலின வேறுபாடுகளைக் களையும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், ஆற்றல்மிக்க இளையோரை உருவாக்குவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து, நாட்டின் பொருளாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகின்றது. அண்மையில் ஒன்றிய அரசு புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட விவரங்களின்படியே பத்தாண்டுக்குப் பிறகு, தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.19 சதவிகிதமாக இரட்டை இலக்க வளர்ச்சிய எட்டியுள்ளது.
இந்நிலையில்தான் கவர்னர் பொய்களையும் அவதூறுகளையும் வரி இறைத்திருக்கிறார். கவர்னரின் பேச்சுக்குப் பதில் கூறும் முகமாக ஆதாரங்களை முன்வைத்துப் பதிலளிப்பது, பயனற்றது. ஏனென்றால், கவர்னர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் கவர்னராகச் செயல்படாமல், திராவிட மாடல் மீது வெளிப்படையாக வெறுப்பைக் கக்கும் நாக்பூரின் ஏஜெண்டாகச் செயல்பட்டு வருகின்றார்.
நாட்டிலேயே தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக இருப்பதும் தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே அதிகப் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கியதும் அதிக ஸ்டார்ட் அப் எண்ணிக்கைகளும் உருவாக்கியது தமிழ்நாடுதான்.
கடந்தாண்டு புயல் வெள்ளப் பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு 37,907 கோடி ரூபாய் கேட்டபோது வெறும் 276 கோடி ரூபாயை மட்டுமே வழங்கி வஞ்சித்தது ஒன்றிய அரசு. பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியையும் இன்னும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்று ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவித்தது ஜனநாயகப் படுகொலை இல்லையா?
கமலாலயத்திற்குப் போட்டியாக ராஜ்பவனை மாற்ற முயல்கிறார். கவர்னர் அந்தந்த மாநில அரசுகளுக்கு நண்பராக இருக்க வேண்டியவர். ஆனால், எதிரிக் கட்சியாக நின்று, வசைமாரி பொழிந்து கொண்டிருக்கிறார். என தெரிவித்துள்ளார் .






