ரூ.147 கோடியில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

ரூ.31 கோடி மதிப்பீட்டில் 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.01.2026) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை, ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” திறந்து வைத்து, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உன்னத திட்டமான வடசென்னை வளர்ச்சி திட்டம், வடசென்னை பகுதியின் சமர்ச்சீர் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு சுகாதாரம், கல்வி, நகர உட்கட்டமைப்பு, பாதுகாப்பான குடிநீர், கழிவுநீர் வசதி, மின்சாரம், வாழ்விடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருகிறது.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக மண்ணடி, முத்தியால்பேட்டை, ஏழுகிணறு, பிராட்வே பிரகாசம் சாலை, வால்டாக்ஸ் சாலை, ஜட்காபுரம், கல்யாணபுரம், வுட்வொர்ப் போன்ற இடங்களில் நீண்ட காலமாக சாலை ஓரங்களிலும், கால்வாய் ஓரங்களிலும் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் கடந்த 4.12.2024 அன்று சென்னை, வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, சென்னை, ஏழுகிணறு, பழைய சிறைச்சாலை சாலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், 776 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்திடும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 31.01.2025 அன்று களஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
அதன்படி, குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் தரைதளம் மற்றும் 9 தளங்களுடன் இரண்டு தொகுதிகளாக 3,26,609 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் திறந்து வைத்தார்.
பின்னர், அங்கன்வாடி மையம், நகர்ப்புற நலவாழ்வு மையம், நியாய விலைக் கடைகள், முதல்வர் படைப்பகம், நவீன நூலகம், உடற்பயிற்சிக்கூடம், திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர், முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். ஒதுக்கீட்டு ஆணைகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளில்” உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் 415 சதுர அடி பரப்பளவில் சமையலறை, கூடம் (Hall), படுக்கைஅறை, கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதோடு மாற்றுத்திறனாளிகளுக்கென 40 குடியிருப்புகளும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” வளாகத்திலுள்ள உட்கட்டமைப்பு வசதி கட்டிடத்தில் "அங்கன்வாடி மையம்", நகர்ப்புற நல வாழ்வு மையம், "நியாய விலைக் கடைகள்", “முதல்வர் படைப்பகம்”, “நவீன நூலகம்”, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேக “உடற்பயிற்சிக் கூடம்” அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இவ்வளாகத்தில் மாணவச் செல்வங்களை நெறிப்படுத்தும் வகையில் “திறந்தவெளி அரங்கம்”, “குழந்தைகள் விளையாட்டுப் பகுதி”, பூங்காக்கள், 8 எண்ணிக்கையிலான மின்தூக்கி வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், சீரான மின்சாரம் வழங்கிடும் வகையில் இரண்டு எண்ணிக்கையிலான 500 KVA திறன் கொண்ட மின்மாற்றிகள், 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தீயணைப்பு குழாய் தொட்டிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் “ஒருங்கிணைந்த வளாகத்தில்" 700 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன. இதன் அருகில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 9 தளங்களுடன் கூடுதலாக 144 புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றியழகன், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி. ஜி. வினய், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி சிங், பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






