10 சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.3.60 கோடி கல்வி உதவித் தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

வெளிநாட்டில் பட்டமேற்படிப்பு பயில கல்வி உதவித் தொகைக்கான மானியத்தை மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் வழங்கினார்.
சென்னை,
வெளிநாட்டில் பட்டமேற்படிப்பு பயில 10 சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு ரூ.3.60 கோடி கல்வி உதவித் தொகைக்கான ஆணைகள் மற்றும் 2 தொன்மையான தேவாலயங்கள் மற்றும் 2 பழைமை வாய்ந்த தேவாலயங்களை புனரமைப்பதற்காக 1 கோடியே 81 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மானியத் தொகைக்கான காசோலைகளை தேவாலய பிரதிநிதிகளிடம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.01.2026) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் வெளிநாட்டில் பட்டமேற்படிப்பு பயில 10 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 10 சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு தலா 36 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
மேலும், 2 தொன்மையான தேவாலயங்கள் மற்றும் 2 பழைமை வாய்ந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு முதல் தவணைத் தொகையாக 1 கோடியே 81 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தேவாலய பிரதிநிதிகளிடம் வழங்கினார்.
2025-26 ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையில், சிறுபான்மையின மாணவ, மாணவியர் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு மேற்கொள்ள ஏதுவாக ஆண்டுக்கு 10 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் வகுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, வெளிநாட்டில் உயர்கல்வி மேற்கொள்ள 10 சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு 36 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 3.60 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து 3.09.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழங்களில் முதுகலை பட்டப்படிப்பு பயில சேர்க்கைப்பெற்ற 10 சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு தலா 36 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கினார்.
100 வருடங்களுக்கு மேல் தொன்மையான கிறித்தவ தேவலாலயங்களை புனரமைக்கும் திட்டம் 2022-2023ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 13 தொன்மையான தேவாலயங்களை புனரமைப்பதற்காக 22.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், இன்றையதினம் திருவாரூர் மாவட்டம், பெரும்பண்ணையூர் புனித சூசையப்பர் தேவாலயம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூர் புனித யாக்கோப்பு தேவாலயம் ஆகிய இரண்டு தொன்மையான தேவாலயங்களை புனரமைத்திட 3 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 270 ரூபாய் நிதி ஒப்பளிக்கப்பட்டு, முதல் தவணைத் தொகையாக 1 கோடியே 71 லட்சத்து 26 ஆயிரத்து 635 ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் தேவலாய பிரதிநிதிகளிடம் வழங்கினார்.
மேலும், பத்து ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் கிறித்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தலுக்கு மானியத்தொகை அளிக்கும் திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பாப்பாக்குறிச்சி Zion IPA தேவாலயம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், காடம்பாடி இந்திய சுவிசேஷ திருச்சபை (ECI) ஆலயம் ஆகியவற்றை புனரமைத்து பழுதுபார்ப்பதற்காக 14 லட்சத்து 27 ஆயிரத்து 686 ரூபாய் நிதி ஒப்பளிக்கப்பட்டு, முதல் தவணைத் தொகையாக 10 லட்சத்து 70 ஆயிரத்து 765 ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் தேவாலய பிரதிநிதிகளிடம் வழங்கினார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






