முருக பக்தர்கள் மாநாடு; தி.மு.க. தோல்வி பயத்தில் இருப்பதால் விமர்சிக்கிறது - நயினார் நாகேந்திரன்

வடபழனியில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார்.
சென்னை,
இந்து முன்னணி சார்பில் மதுரையில் வரும் 22-ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், மத்திய மந்திரிகள், பா.ஜ.க. தேசிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பலர் 15-ந்தேதியில் இருந்து விரதம் இருந்து வருகின்றனர்.
இந்த மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். அதே சமயம், இது சங்கிகள் மாநாடு என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். மேலும் வி.சி.க. தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், இந்த மாநாடு தொடர்பாக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்களைப் பொறுத்தவரை முருகர் தமிழ் கடவுள். தி.மு.க. தோல்வி பயத்தில் இருப்பதால், முருக பக்தர்கள் மாநாட்டை விமர்சிக்கிறது" என்று தெரிவித்தார்