தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய நயினார் நாகேந்திரன்

‘தமிழகம் தலை நிமிர’ என்ற முழக்கத்துடன் மதுரையில் தேர்தல் சுற்றுப்பயணத்தை நயினார் நாகேந்திரன் இன்று தொடங்கினார்.
மதுரை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், தே.மு.தி.க., வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க., த.வெ.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா, சட்டசபை தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி, கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தலை முன்னிட்டு ‘தமிழகம் தலை நிமிர’ என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் செய்ய கடந்த சில நாட்களாக திட்டமிட்டு வந்தார்.
‘தமிழகம் தலைநிமிர’ என்ற முழக்கத்துடன் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இ்ன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது பிரசார பயணத்தை மதுரையில் இருந்து தொடங்கினார். இதற்கான தொடக்க விழா, அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பு பகுதியில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகளும் சாமி தரிசனம் செய்தனர். அப்போது நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் அதிகரித்து சொல்ல முடியாத துயரத்தில் மக்கள் உள்ளனர். தூய்மை பணியாளர்கள் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியதிற்கு தண்டிக்கப்பட்டு உள்ளனர். கோர்ட்டே கேள்வி கேட்கும் ஒரே ஆட்சியாக தான் தி.மு.க. இருக்கிறது.
கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். அரசு மற்றும் போலீசாரின் அலட்சியமே காரணம். காவல் துறையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் வைத்து இருக்கிறார். ஆனால் தினம் தினம் கொலை சம்பவம் நடக்கிறது. சாலை விபத்தில் உயிரிழந்தால் ரூ. 2 லட்சம் கொடுக்கிறார்கள். சாராயம் குடித்து இறந்து போனால் ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுக்கிறார்கள்.
இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது. தி.மு.க. அரசின் ஆட்சி காலத்தின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த ஆட்சியில் அலங்கோலம் மக்கள் மத்தியில் இருந்து வெகு விரைவில் தீர்க்கப்படும். விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.






