நீட் தேர்வு: உடையில் இருந்த பட்டன்களால் மாணவிக்கு வந்த சிக்கல் - தக்க சமயத்தில் உதவிய மகளிர் போலீஸ்


நீட் தேர்வு: உடையில் இருந்த பட்டன்களால் மாணவிக்கு வந்த சிக்கல் - தக்க சமயத்தில் உதவிய மகளிர் போலீஸ்
x
தினத்தந்தி 4 May 2025 1:40 PM IST (Updated: 4 May 2025 2:37 PM IST)
t-max-icont-min-icon

மாணவிக்கு தக்க நேரத்தில் உதவி செய்த பெண் போலீசாரின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.

திருப்பூர்,

நாடு முழுவதும் 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் (பேப்பர்-பேனா) நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை நீட் தேர்வு எழுத இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதற்கிடையில் திருப்பூரில் உள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியின் உடையில் அதிக பட்டன்கள் இருந்ததாக கூறி, தேர்வு மைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவியை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதனால் கலக்கமடைந்த மாணவி செய்வதறியாது தவித்துள்ளார். அப்போது தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் போலீசார் உடனடியாக மாணவியை இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள துணிக்கடைக்கு அழைத்துச் சென்று புதிய உடை வாங்கிக் கொடுத்தனர்.

அந்த உடையை அணிந்து கொண்டு மாணவி மீண்டும் தேர்வு மையத்திற்கு வந்தார். பின்னர் சோதனைக்கு பிறகு அதிகாரிகள் அந்த மாணவியை தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். மாணவிக்கு தக்க சமயத்தில் உதவி செய்த பெண் போலீசாரின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.

1 More update

Next Story