நெல்லை பொருநை அருங்காட்சியகம் 21-ந்தேதி திறப்பு

பொருநை அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.
நெல்லை,
தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த நாகரிகங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில், கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் தமிழ்நாட்டின் தொன்மை நாகரிகத்தை வெளிக்கொணர்ந்துள்ளது.
பொருநை என்பது தமிழ்நாட்டின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதியின் ஆதி பெயராகும். திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பொருநை ஆறு, தூத்துக்குடி மாவட்டம் வழியாக கடலில் கலக்கிறது. இந்த பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தை அறிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை மற்றும் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி ஆகிய நான்கு இடங்களில் அகழ்வாராச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த அகழ்வாராய்ச்சி பணியின்போது முதுமக்கள் தாலி, நாணயம், பானை, ஏடுகள் போன்ற ஏறத்தாழ 2 ஆயிரத்திகும் அதிகமான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்படி அகழ்வாய்வுகளின் போது கண்டறியப்பட்ட பொருட்களை வைக்க திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் பிரமாண்டபமாக உருவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி இரட்டை மலை அருகே பொருநை அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 13.2 ஏக்கர் பரப்பளவில், 54 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்படும் இந்த அருங்காட்சிகத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முடிவுற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21ந் தேதி திறந்து வைக்க உள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.






